வேலூர், நவ.12: வேலூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டு வடக்குமேடு பகுதியை சேர்ந்தவர் திருமால்(எ)மாலு(25), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2018ம் ஆண்டு 15 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமியை அழைத்துச் சென்று, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமாலை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், மாற்றுத்திறனாளி சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திருமாலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
+
Advertisement
