அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம் நமக்கு எதுக்கு வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்
வேலூர், செப்.12: அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம் என்பது அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம். அது நமக்கு எதுக்கு என்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் சேண்பாக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மனு அளித்த பயனாளிகளுக்கு அதற்கான ஆணையை வழங்கினார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பணிகளுக்கான நடவடிக்கைகள் துவக்கப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தம் விவாகாரத்தில் தமிழகம் பீகாரை போன்று அல்ல. தமிழகம் அதிகளவு விழிப்புணர்வு பெற்ற மாநிலம். அங்கு நடக்கக்கூடிய ஆட்சி இங்கு நடைபெறவில்லை. இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். அவர்கள் சொல்வது தமிழ்நாட்டில் நடைபெறாது.
சட்டமன்றத் தேர்தலுக்குள் திமுக கூட்டணி சிதைந்து விடும் என எடப்பாடி அப்படித்தான் கூறுவார். பாவம் அவர் என்ன செய்வார். ஏதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார். அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர். அவர் எங்களுக்காகவா பேசுவார்? அவர் அவருக்காக தான் பேசுவார். பழிவாங்கும் நோக்கோடு திமுக செயல்படுவதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்தன் கூறும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர்களுக்கு அரசியலில் சர்வீஸ் இல்லை. இதிலிருந்தே தெரிகிறது தவெக எந்த அளவுக்கு அரசியல் அனுபவம் உள்ளது என்று. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ரூ.1500, 2000 கோடி என வழங்கி வருகிறார். தமிழகத்திற்கு அதைப்போல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என கேட்டதற்கு? தமிழகத்திற்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நினைத்தால் அது நல்லதல்ல. அவர் அப்படித்தான் நினைப்பார் போல என தெரிகிறது. அன்புமணி ராமதாஸ் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம் நமக்கு எதுக்கு. இவ்வாறு அவர் கூறினார்.