தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5.5 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் உத்தரவு அணைக்கட்டு அருகே விபத்தில் பலியான
வேலூர், டிச.11: அணைக்கட்டு அருகே அரசு பஸ் மோதி பலியான கூலித்தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5.5 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அணைக்கட்டு அடுத்த உனைமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்குழந்தை(60) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி தனது வேலையை முடித்து அணைக்கட்டு-குடியாத்தம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த சாலையில் பின்னால் வந்த அரசு பஸ், சின்னக்குழந்தை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த சின்னக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது தந்தை இறப்புக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது மகள் உமா, வேலூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். விசாரணையில், மனுதாரரின் தந்தை இறப்புக்கு அரசு பஸ்சை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.5.5 லட்சம் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் வழங்க, தமிழக அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.


