வேலூர், டிச.11: வேலூர் மத்திய சிறையில் போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(28). ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீசில் இவர் மீது போக்சோ வழக்கு பதிவானது. இந்த வழக்கில் ராணிப்பேட்டை கோர்ட், கடந்த ஜூலை 23ம் தேதி கன்னியப்பனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மத்திய சிறையில் உள்ள கோழி பண்ணையில் கன்னியப்பன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள 3வது பிளாக்கின் பின்புறம் உள்ள புளியமரத்தில் கன்னியப்பன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக்கண்ட சக கைதிகள் மற்றும் சிறைக்காவலர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக அனுமதித்தனர். கன்னியப்பன் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை உடனிருந்து கவனிக்க யாரும் இல்லை என்ற மனவருத்தத்தில் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


