ஒடுகத்தூர், டிச.11: ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை ஊராட்சியை 3 ஆக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், அல்லேரி, கட்டிப்பட்டு புதிதாக உதயமாகியுள்ளது. ஊரக வளர்ச்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் 5 மலை ஊராட்சிகளை சேர்ந்த 17 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை ஊராட்சியில் சுமார் 48 கிராமங்கள் உள்ளது. இதனை மூன்றாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி ஒப்புதலோடு பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள 48 கிராமங்களில் பீஞ்சமந்தை 23, அல்லேரி 12, கட்டியப்பட்டு 13 ஆகிய தலைமையிடமாக கொண்டு பிரிக்கப்பட்டு அரசாணையை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இதற்கு மலை கிராம மக்கள் வரவேற்பு அளித்து அனைவரும் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
+
Advertisement


