வேலூர், நவ.11: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு விழா நடக்கவுள்ளது. இவ்விழாவையொட்டி நாடு முழுவதும் இருந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், சபரிமலைக்கு யாத்திரை செல்வார்கள். இந்த யாத்திரைக்காக முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவிற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. அந்த வகையில், தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சார்லப்பள்ளி-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (07107) வரும் 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19ம் தேதிகளில் (திங்கட்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது.
சார்லப்பள்ளியில் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு, நளகொண்டா, குண்டூர், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடிக்கு அதிகாலை 5.40 மணிக்கு வருகிறது. பின்னர், ஜோலார்பேட்டை வழியே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியே கொல்லத்திற்கு இரவு 10 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்- சார்லப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07108) வரும் 19, 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 14, 21ம் தேதிகளில் (புதன்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா வழியாக சார்லப்பள்ளிக்கு அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்ேவ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

