சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் ஏ.சி.சண்முகம் பேட்டி வேலூரில் புதிய நீதிக்கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது
வேலூர், நவ.11: வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் நினைவிடத்தில் நாளை திருமுருக கிருபானந்த வாரியார் குரு பூஜை நடக்க உள்ளது. நேற்று மாலை புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் நேரில் வந்து திருமுருக கிருபானந்த வாரியார் நினைவிடத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய நீதிக்கட்சியை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். வேலூர் சட்டமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது. ஆனால், நான் போட்டியிட மாட்டேன். நாளை மறுதினம் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் குருபூஜை ஒட்டபிடாரத்தில் நடக்கிறது.
அவருக்கு மணிமண்டபம் கட்ட வரும் 18ம் தேதி காலையில் அடிக்கல் நாட்டுகிறோம். அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக மாறி மாறிதான் ஆட்சிக்கு வந்துள்ளன. தமிழகத்தில் மது, பிற போதை பொருட்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து எல்லா கட்சிகளும் குறை சொல்கின்றன. ஒரு சிலருக்கு வெவ்வேறு இடங்களில் ஓட்டு இருக்கும். அதனை எல்லாம் சரி செய்வதற்காகவே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கியது என்பது துரதிருஷ்டவசமானது. அவரும், நானும் 1972ல் இருந்து கட்சிக்காரர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

