வேலூர், அக்.11: தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 15 சிறைவாசிகள் இதுவரை பரோலுக்கு விண்ணப்பித்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், பிற முக்கிய குடும்ப நிகழ்வுகளிலும் குடும்பத்துடன் கலந்து கொள்ள சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்படுகிறது. சிறைவாசிகளின் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் தற்காலிக விடுப்பு எனப்படும் பரோல் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பரோல் கால அவகாசம் மொத்த தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படாது. ஆனால் அந்த காலத்தை நீட்டிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூர் சிறையில் இருந்து நேற்று முன்தினம் வரை 15 நன்னடத்தை சிறைவாசிகள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். தீபாவளிக்கு முந்தைய நாள் வரை பரோல் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதனை சிறைத்துறை நிர்வாகம் பரிசீலித்து சம்பந்தப்பட்ட சிறைவாசிக்கு பரோல் வழங்கும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement