வேலூர், அக்.11: பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி வாலிபரிடம் ரூ.7.52 லட்சம் மோடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, அவரது டெலிகிராம் எண்ணிற்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. அதில் இருந்த லிங்கில் சென்று, அந்த குழுவில் இணைந்துள்ளார். அந்த குழுவில் இருந்த உறுப்பினர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்து, அதன் வாயிலாக கிடைத்த லாபம் குறித்து குழுவில் பதிவிட்டுள்ளனர். மேலும் அதுதொடர்பான இணையதள லிங்க்கையும் குழுவில் வெளியிட்டுள்ளனர். அதை உண்மை என நம்பி, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அந்த நபர் ஆர்வம் காட்டியுள்ளார்.
அதன்படி கடந்த மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல தவணைகளாக ரூ.7.52 லட்சம் ரூபாயை அந்த இணையதளத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த தொகைக்கு அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக இணையதள கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரால் அந்த தொகையை எடுக்க முடியவில்லை. அப்போது இணையதள நபர்களிடம் பணத்தை எடுக்க முடியவில்லை என கூறியபோது கூடுதலாக முதலீடு செய்யுமாறு தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.