அதிகபட்சமாக பொன்னையில் 122 மி.மீ மழை பதிவு பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி வேலூர் மாவட்டத்தில் தொடரும் மழை
வேலூர், ஆக.9: வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூர் சர்க்கரை ஆலையில் 80 மி.மீ மழை பதிவாகி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு 8 மணி முதல் மழை பெய்து வருகிறது. அதேபோல், நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து 98.4 டிகிரியாக பதிவானது. இரவு 11 மணிக்கு மேல் மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக அம்முண்டியில் (வேலூர் சர்க்கரை ஆலை) 80.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): ஒடுகத்தூர் 11, குடியாத்தம் 38, மேல்ஆலத்தூர் 27.40, மோர்தானா அணை 25, ராஜாதோப்பு அணை 25, வட விரிஞ்சிபுரம் 47, காட்பாடி 61, பொன்னை 122, பேரணாம்பட்டு 4.40, வேலூர் கலெக்டர் அலுவலகம் 41.70, வேலூர் தாலுகா 36.30 பதிவாகியுள்ளது.