வேலூர், அக்.8: வன உயிரின வாரவிழாவையொட்டி ஓவியம், கட்டுரை போட்டிகளில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது. வன உயிரின வார விழா கொண்டாடுவதற்கு, அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது, பல்லுயிர் பெருக்கத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்துகளான காடழிப்பு, பருவநிலை மாற்றம் போன்றவற்றைக் குறைப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவில் இந்த விழா கொண்டாடப்பட்டு, வன விலங்குகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு உணர்த்தப்படுகிறது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு வனப்பகுதியை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வனத்துறை சார்பில் இந்தாண்டு மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு, வினாடி வினா போட்டிகள் நேற்று நடந்தது. வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வனச்சரக அலுவலர்கள் முரளி, பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை (இன்று) பரிசு வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.