பள்ளிகொண்டா, ஆக.8: பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்திருந்த வியாபாரியிடம் கத்தி காட்டி கொலை மிரட்டல் விடுத்து ரூ.3000 பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே இருபுறமும் 20க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. இவர்கள் காலை முதல் இளநீர், கொய்யா, வாழை பழங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் செல்பவர்கள் உட்பட பலர் பழங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை தள்ளிவண்டியில் கொய்யா பழம் விற்கும் வியாபாரியிடம் வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(23) என்பவர் ரூ.100க்கு கொய்யா பழம் வாங்கியுள்ளார். தொடர்ந்து வியாபாரி அவரிடம் பழத்திற்கான பணம் கேட்டபோது, என்னிடமே பணம் கேட்கின்றாயா? நான் யார் தெரியுமா என தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகின்றது. மேலும், வாங்கிய பழத்திற்கும் பணம் தராமல் வியாபாரியிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை கத்தி முனையில் கொலை மிரட்டல் விடுத்து பறித்து சென்றதாக தெரிகின்றது. இதனையடுத்து பழ வியாபாரி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெயப்பிரகாஷை கைது செய்தனர்.