விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் 21வது தவணை வழங்கப்படாது வேளாண்மை இணை இயக்குனர் தகவல் வேளாண் அடுக்கக அடையாள எண் பெறாத
வேலூர், நவ.7: வேளாண் அடுக்கக அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் 21வது தவணை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி சிட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது ஒன்றிய அரசால் வேளாண் அடுக்ககத்தின் கீழ் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தனிப்பட்ட அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் 21வது தவணை வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
வேலூர் மாவட்டத்தில் 35,160 விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களில் 27,592 விவசாயிகள் மட்டுமே வேளாண் அடுக்கக தனிப்பட்ட அடையாள எண்பெற்றுள்ளனர். மீதமுள்ள 7,568 விவசாயிகள் தனிப்பட்ட அடையாள எண் பெறவில்லை. இந்த விவசாயிகள் வரும் 15ம் தேதிக்குள் அடுக்கக அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே பி.எம் கிசான் தொகையை தொடாந்து பெறமுடியும். மேலும் அவர்களுக்கு பயிர்காப்பீடு திட்ட பலன்களும் கிடைக்கும். எனவே இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக ஆதார் கார்டு, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், சிட்டா ஆகியவற்றுடன் அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி இலவசமாக வேளாண் அடுக்கக அடையாள எண்ணை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
