ஓடும் அரசு பேருந்தில் ஆசிரியைக்கு பாலியல் சீண்டல் முதியவருக்கு பயணிகள் தர்ம அடி பள்ளிகொண்டா அருகே பரபரப்பு
பள்ளிகொண்டா, நவ.7: குடியாத்தத்திலிருந்து ஒடுகத்தூர் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை பிடித்து சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரிலிருந்து குடியாத்தம் வரை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வழியாக இந்த ஒரு அரசு பேருந்து மட்டுமே செல்வதால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் பிற அலுவலகங்கள் செல்வோர், ஆசிரியைகள், ஷூ கம்பெனி மற்றும் கூலி வேலைக்கு செல்வோர் என நூற்றுக்கணக்கான பயணிகளால் பேருந்து தினந்தோறும் நிரம்பி வழியும். இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு வழக்கம்போல் அரசு டவுன் பஸ் குடியாத்தத்திலிருந்து ஒடுகத்தூர் நோக்கி புறப்பட்டது. அதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பயணம் செய்தனர். அப்போது, பேருந்து பள்ளிகொண்டா அடுத்த ஐதர்புரம் பகுதிக்கு வந்தபோது பசுமாத்தூர் தனியார் பள்ளியில் பணிபுரியும் அகரம்சேரியை சேர்ந்த 27 வயது ஆசிரியை பேருந்தில் ஏறியுள்ளார்.
தொடர்ந்து பேருந்து பள்ளிகொண்டா பகுதியை கடந்து கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆசிரியையிடம் தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஆசிரியை கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அருகிலிருந்த சக பயணிகள் டிரைவரிடம் பேருந்தை நிறுத்த சொல்லி ஆசிரியையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனையடுத்து பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சென்று நடத்திய விசாரணையில், ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் அகரம் கூட்ரோடு அடுத்த போடிபேட்டை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்(50) என்பதும், திருமணமாகி மனைவி பிரிந்து விட்டு சென்ற நிலையில், தனியாக வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து ஆசிரியை புகார் கொடுக்காத நிலையில், போலீசார் விஸ்வநாதனை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

