Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குளிக்க சென்ற மாற்றுத்திறனாளி மூழ்கி பலி உறவினர்கள் சாலை மறியல் கே.வி.குப்பம் அருகே பாலாற்று தடுப்பணையில்

கே.வி.குப்பம்,அக்.7: பாலாற்று தடுப்பணையில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி மாற்றுத்திறனாளி பரிதாபமாக பலியானார். தீயணைப்பு துறையினரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கே.வி.குப்பம் அடுத்த கவசம்பட்டு ஊராட்சி கீழுர் பகுதியை சேர்ந்தவர்கள் சாமுண்டி, மாரிமுத்து. இத்தம்பதி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டனர். இவர்களுக்கு மெய்யழகன் (60), குபேந்திரன்(53), குமார் (50) ஆகிய மூன்று மகன்கள். மூத்த மகன் மெய்யழகன் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

இரண்டாம் மகன் குபேந்திரன்(53). மாற்றுத்திறனாளியான இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமாணமாகி மனைவி தற்போது உடனில்லை. 3வது மகன் குமார் (50) வேலூர் தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இதனிடையே மாற்றுத்திறனாளி குபேந்திரன் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை கவசம்பட்டு பாலாற்றில் இருந்து கொட்டாறு எனும் ஆறு பிரியும் இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணைக்குள் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கரைக்கு வராமல் இருந்ததை கரையின் மீது அமர்ந்திருந்த ஊர் மக்கள் சிலர் பார்த்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்த இளைஞர்கள் கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் தீயணைப்பு துறையினர் வர நேரமானதால் நன்றாக நீச்சல் பழக்கம் உள்ள அதே பகுதியை சேர்ந்த நபர்களை அழைத்து கொண்டு சுமார்‌ 2 மணி நேரம் போராடி உடலை மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர். அங்கு காத்திருந்த உறவினர்கள் உடலைபார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும், தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் வராததை கண்டித்து உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கவசம்பட்டு- விரிஞ்சிபுரம் சாலையில் மாலை 6 மணியளவில் அவ்வழியாக வந்த வாகனங்களை மடக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் தாசில்தார் பலராமன், இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார், விஏஓ அகிலா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி பார்த்திபன், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அங்கு வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இதே தடுப்பணையில் மூழ்கி கடந்த ஜூன் மாதம் 2ம் தேதியன்று 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.