சிறுத்தை நடமாடுவதாக சமூக வலைதளங்களில் வைரல் * வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை * வனத்துறையினர் எச்சரிக்கை அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தில்
பள்ளிகொண்டா, அக்.7: அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் வதந்தி பரப்பி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மலைப்பகுதிகளையொட்டி உள்ளன. இந்நிலையில், மலைப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது, காட்டு பன்றிகள், எருமைகள் ஊருக்குள் உள்ள விவசாயி பகுதிகளுக்கு வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், தண்ணீர் தேடி அதிகளவில் மான்கள் கிராமங்களில் தஞ்சம் அடைகின்றன.
அதனை வனத்துறையினர் அவ்வப்போது நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பாக மீட்டு காப்பு காடுகளில் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் மற்றும் அதனையொட்டியுள்ள மானியக்கொல்லை கிராமங்களில் சிறுத்தை ஒன்று நுழைந்து வலம் வருவதாக வாட்ஸ் அப் குரூப்களில் தகவல்கள் வேகமாக பரவி வந்தன. அப்போது, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நாங்களும் தகவலறிந்து சம்பந்தப்பட்ட இடத்தில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
சிறுத்தை நடமாட்டத்திற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. மேலும், இதுபோன்று தவறான வீண் வதந்திகளை சமூக வலைதளம் மூலம் பரப்பி வருவதால் தேவையில்லாமல் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் மற்றும் அணைக்கட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து சமூக வலை தளத்தில் வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.