வேலூர், ஆக.7: வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் ஹரி(55). இவர் ஆவின் பால் பதப்படுத்தும் பிரிவு மேலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி, இரவு தொழிற்சாலையில் பால் வேனில் இருந்து பால் இறக்கும் பணியில் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(31), ஹரிகிருஷ்ணன், சத்துவாச்சாரி சிஎம்சி காலனியைச் சேர்ந்த பால் சாமுவேல் (25) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற மேலாளர் ஹரி பால் இறக்கும் பணியை கண்காணித்துள்ளார். அங்கு பணியிலிருந்த 3 பேரும் இங்கு எல்லாம் நிற்கக்கூடாது, அலுவலகத்திற்கு செல்லுங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஹரியை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் ஹரி நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமார், பால் சாமுவேலை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஹரிகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
+
Advertisement