திருவலம், டிச.5: திருவலம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற்றுகின்றனர். அதேபோல் குப்பைகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரை சேமிக்கும் விதமாகவும், குடிநீரை வீணாக்குவதை தடுக்கும் விதமாக தண்ணீர் சிக்கனம், தேவை இக்கணம் எனும் பழமொழிக்கு ஏற்ப குடியிருப்புகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீருக்கு மீட்டர் பொருத்தும் பணிகள் திருவலம் பேரூராட்சியில் நடந்து வருகிறது. இதையடுத்து பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

