பேரணாம்பட்டு,நவ.5: ஆந்திராவில் இருந்து அரவட்லா மலைப்பாதை வழியாக காரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைப்பகுதி ஏழு வளைவுகள் கொண்டு அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையின் வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்துவதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடியாத்தம் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் எழில் வேந்தன், தலைமை காவலர்கள் பார்த்திபன், அறிவழகன், சதீஷ்குமார் மற்றும் போலீசார் கார்த்தி ஆகியோர் மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக கார் ஒன்று அதிவேகமாக வந்து நிற்காமல் சென்றது. இதில், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை நான்கு கி.மீ. தூரம் மலைப்பாதை வழியாக துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்பு காரில் சோதனை செய்தபோது, சுமார் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.மேலும், விசாரணையில், ஆம்பூர் கோவிந்தாபுரத்தை சேர்ந்த சபரி ராம் (24,) வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த தினகரன்(25) என்பதும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா விற்பதற்காக வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
