சாலையில் மனித மண்டை ஓடுகள் கண்டெடுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி ேபரணாம்பட்டு அருகே சிறுவர் பூங்கா செல்லும்
பேரணாம்பட்டு, டிச.2: பேரணாம்பட்டு அருகே சிறுவர் பூங்கா செல்லும் சாலையில் மனித மண்டை ஓடுகள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த காமராஜர் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டு அப்பூங்காவில் சிறுவர்கள் காலை மற்றும் மாலை வேளையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதி சிறுவர்கள் வழக்கம்போல் பூங்காவிற்கு சென்றனர். அப்போது வழியில் சாலையில் 2 மனித மண்டை ஓடுகள் இருப்பதை கண்டு பயந்தனர். இதுகுறித்து சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த இரண்டு மனித மண்டை ஓடுகளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, போலீசார் சாலையில் கிடந்த மண்டை ஓடுகளை மாந்திரீகம் செய்ய மாந்திரீகவாதிகள் யாராவது வைத்துள்ளார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக சாலையில் வீசி சென்றார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

