வேலூர், ஆக.2: ஒடுகத்தூர் அருகே ஆட்டை திருடி வந்து சந்தையில் விற்க முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த நாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகாம்பாள். இவர் தனது வீட்டின் அருகில் கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல ரேணுகாம்பாள் கொட்டகைக்கு சென்றார். அப்போது, அவரது ஆடு ஒன்று திருட்டு போனது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று ஒடுகத்தூரில் ஆட்டுச்சந்தை நடந்ததால் ஆட்டை திருடிச்சென்ற நபர்கள், அங்கு விற்பனைக்கு கொண்டு வரலாம் என நினைத்து ரேணுகாம்பாள் தனது தந்தை மற்றும் உறவினர்கள் அங்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் அவரது ஆட்டை பிடித்துக் கொண்டு திருதிருவென முழித்துக் கொண்டிருந்தார்.
உடனே ரேணுகாம்பாள் அங்குள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், அவரை வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபி(27) என்பதும், நேற்று அதிகாலையில் ரேணுகாம்பாள் வீட்டின் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆட்டை திருடி வந்து விற்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து கோபியை கைது செய்தனர். மேலும், அவர் வேறு எங்காவது ஆடுகளை திருடியுள்ளாரா? என தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். ஆட்டை திருடி சந்தையில் விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.