Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வலி நிவாரணி மாத்திரை விற்க முயன்ற 10 பேர் கைது வேலூர் அப்துல்லாபுரம், பள்ளிகொண்டா பகுதிகளில்

பள்ளிகொண்டா, ஆக.2: பள்ளிகொண்டா மற்றும் வேலூர் அப்துல்லாபுரம் பகுதிகளில் வலி நிவாரணி மாத்திரைகள், சிரிஞ்சுகள் விற்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா எல்லைகுட்பட்ட ராமாபுரம் சாலை, சந்தைமேடு அருகே உள்ள அரசு பள்ளி செல்லும் வழியில் போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் விற்க முயன்ற 5 பேரை டிஎஸ்பி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் 5 பேரின் மொபைல் போனில் அடிக்கடி தொடர்பில் இருந்தவர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதில், டிஎஸ்பி தனிப்படை போலீசாருடன், பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார். காவலர்கள் ராம்குமார், மகேந்திரன், ஜெயந்தி, தேவி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கந்தநேரி தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த வெட்டுவாணம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தீபக்(35) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தீபக் ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பள்ளிகொண்டா வட்டாரத்தில் விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். பின்னர் வெளியே வந்த அவர், சொந்த ஊரில் வசிக்காமல் தெலங்கானாவுக்கு சென்றுள்ளார். அங்கு கத்துவால் மாவட்டம் ராமச்சந்திரா நகரை சேர்ந்த ரமேஷ்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சேர்ந்து போதை மாத்திரை, போதை சிரிஞ்சுகளை அங்கு விற்பனை செய்துள்ளனர்.

பின்னர் மருத்துவ ரசீது இல்லாமல், தமிழ்நாட்டிற்கு போதை மாத்திரை, ஊசிகளுடன் வந்த இருவரும் குடியாத்தம் ஆர்டிஓ ஆபீஸ் ரோட்டை சேர்ந்த ஜீவா(25), பள்ளிகொண்டா மளிகை தெருவை சேர்ந்த கவின்(20), வேப்பங்கால் ராமாபுரம் ரோட்டை சேர்ந்த விக்னேஷ்(26), பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயில் தெருவை சேர்ந்த சத்தியசீலன்(21), கீழாச்சூர் புத்தர் நகரை சேர்ந்த ஜியாஜ்(26), ஆகாஷ்(25) ஆகியோருடன் சேர்ந்து பள்ளிகொண்டா, அணைக்கட்டு, அகரம்சேரி, விரிஞ்சிபுரம், கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் அரசுப்பள்ளி மாணவர்கள், தனியார் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு சிரிஞ்சி மூலம் போதையை ஏற்றியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து 8 பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார் அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போதை மாத்திரை அட்டைகள், 50க்கும் மேற்பட்ட போதை ஏற்றும் ஊசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகொண்டாவில் போதை மாத்திரை விற்றதாக நேற்று 5 பேர் கைதான நிலையில், மேலும் 8 பேர் கைதான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் வேலூர் அப்துல்லாபுரம் நடுநிலைப்பள்ளி அருகே பள்ளி மாணவர்களை குறி வைத்து வலி நிவாரணி மாத்திரைகள் விற்பதாக நேற்று காலை கிடைத்த தகவலையடுத்து விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் வேலூர் வசந்தபுரம் கோபாலகிருஷ்ணன்(23), கொணவட்டம் வெங்கடேசன்(20) என தெரியவந்தது.

அவர்களிடம் 5 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைக்காக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள், சிரிஞ்சுகள் விற்றதாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பள்ளிகொண்டா வட்டாரத்தில் மேலும் 8 பேர், வேலூர் வட்டாரத்தில் 2 பேர் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.