வேலூர், நவ.1: காட்பாடி வழியாக பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே போலீசார் கைப்பற்றினர். பீகார் மாநிலம் தன்பூரில் இருந்து சென்னை பெரம்பூர், காட்பாட வழியாக பெங்களூரு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மதியம் 2.30 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சித்ரா, எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். இதில் ரயிலின் பின்பக்க பொது பயணிகள் பெட்டியில் சீட்டுகளின் அடியில் தலா 30 கிலோ என 15 சிப்பங்களாக கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த 450 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர். இந்த அரிசியை ஆந்திரா அல்லது கர்நாடகத்துக்கு கடத்த முயன்றிருக்கலாம் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட 450 கிலோ அரிசியை ரயில்வே போலீசார், காட்பாடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
+
Advertisement
