வேலூர், ஜூலை 23: பைக் திருடிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் நிஜாம்(45), ஆட்டோ டிரைவர். இவர் கடந்தாண்டு செப்டம்பரில் கொணவட்டத்திற்கு பைக்கில் வந்தார். அப்போது பெரிய மசூதி அருகே பைக்கை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் நிஜாம் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பைக் திருடிய ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தைச் சேர்ந்த அப்ரார் அகமது(38) என்பவரை புதிய பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் ஜேஎம்4 கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரஞ்சிதா, குற்றம் சாட்டப்பட்ட அப்ரார் அகமதுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.