கே.வி.குப்பம், செப்.30:ேக.வி.குப்பம் ஆட்டு சந்தையில் தொடர்ந்து விற்பனை மந்தமாக நடந்ததால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர். கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை வேலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால்தான், ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள்.
நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது. ஆனால் கடந்த வாரங்களை போலவே நேற்று நடைபெற்ற சந்தையில், ஆடுகள் வரத்து குறைவாகவே தென்பட்டது. அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் எதிரொலியாக வியாபாரிகள் குறைந்த அளவிலேயே கூடியிருந்தனர். காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர், உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள், ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் கொண்டுவந்தனர். ஆடுகள் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். நேற்று கடந்த வாரங்களை போலவே வியாபாரம் மந்தமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மிகவும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தொடர்ந்து வரும் வாரங்களிலும் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்ப்பில் உள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் கூறினர்.