வேலூர்: காட்பாடி அருகே கர்ப்பமான சிறுமி பலியான வழக்கில், பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(25), பெயிண்டர். இவர் அருகிலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்து கொள்ளவதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து, காட்பாடி அனைத்து மகிளர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மகேந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழந்தார். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன், உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சந்தியா ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட மகேந்திரனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.