பள்ளிகொண்டா, டிச.15: விரிஞ்சிபுரத்தில் கடைஞாயிறு விழா கோலாகலமாக நடந்தது. இதில் பிள்ளை பேறு ெபற்றவர்கள் பலா மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறக்கப்பட்டது. முன்னதாக பாலாற்றில் நீராடி சூரிய பிரம்ம தீர்த்த குளத்தில் மூழ்கி எழுந்து வந்த பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடியில் பூ, பழங்களை கட்டி கொண்டு சிம்ம குள நுழைவு வாயிலில் நுழைந்து தீர்த்தத்தில் புனித நீராடினர். தொடர்ந்து, ஈர துணியுடன் கோயில் பிரகாரங்களில் படுத்துறங்கி சிவனை வழிபட்டனர். பின்னர் நள்ளிரவு 1 மணி நேரத்திற்கு மேல் படுத்துறங்கிய பெண்கள் மூலவர் மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, நேற்று காலை 6.30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது சூலநாதருக்கு பால், தயிர், இளநீர் உட்பட பலவேறு திரவிய பொருட்களின் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு பாலகன் சிவசர்மனுக்கு உபநயன சிவதீட்சை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9.30 மணியளவில் உற்சவ சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனிடையே, காலை 6 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மார்க்கபந்தீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். மேலும், கடந்த காலங்களில் குழந்தை வரம் வேண்டி சிம்ம குளத்தில் நீராடிய பெண்கள் பிள்ளை பெற்ற நேர்த்திக்கடனை கோயில் உட்பிரகாரத்தில் உள்ள பலா மரங்களில் தொட்டில் கட்டி மனமுருகி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
பின்னர், மாலை 3.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் உற்சவ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின்போது அசம்பாவிந்தங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில், அணைக்கட்டு டிஎஸ்பி நந்தகுமார் மேற்பார்வையில், ராஜசேகர், சுப்பிரமணி, பார்த்தசாரதி, ராமகிருஷ்ணன் உட்பட 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்பாடுகளை வேலூர் மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் விஜயா, துணை ஆணையர் கருணாநிதி, உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் சுரேஷ்குமார், கோயில் செயல் அலுவலர் பிரியா திருக்கோயில் பணியாளர்கள், முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் திருவிரிஞ்சை வாழ் பொதுமக்கள் செய்திருந்தனர்.


