Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 1700 கிலோ போதை பொருள் பறிமுதல் 29 பேருக்கு குண்டாஸ்: எஸ்பி அலுவலகம் தகவல்

வேலூர், ஆக.11:வேலூர் எஸ்பி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற முன்முயற்சியின் கீழ் வேலூர் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருள் மாத்திரைகளை தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த 2024ம் ஆண்டில் 674 குற்றவாளிகளுக்கு எதிராக 584 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7 ஆயிரத்து 532 கிலோ போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகளின் 143 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.

அதேநேரத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை கடந்த 7 மாதங்களில் 172 குற்றவாளிகளுக்கு எதிராக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1700 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 82 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 29 போதை பொருள் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர, கஞ்சா, குட்கா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வலி நிவாரணி மாத்திரைகள் போதைக்காக பயன்படுத்தும் நோக்கில் விற்பனை செய்த 19 குற்றவாளிகள் அடங்கிய குழுவை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டபேண்டடால் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதை தடுக்க, 6 மாநில எல்லை சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து 13 ஆயிரத்து 122 கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, 182 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 1098 போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்டு, போதை பொருளின் தீமைகள் குறித்து, குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.