வேலூர் மாவட்டத்தில் தினமும் 30 புகார்கள் பதிவு; ஆன்லைன் வேலை, பேஸ்புக் மார்பிங் போட்டோ அனுப்பி மோசடி விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் எச்சரிக்கை
வேலூர், டிச.4: தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் அதிகளவில் அரங்கேற தொடங்கிவிட்டது. இதனால் மாவட்டங்கள் தோறும் அந்தந்த எஸ்பி அலுவலகங்களில் சைபர் கிரைம் பிரிவு தனியாக தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் சைபர் கிரைம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆன்லைன் மோசடிகளில் 30 பேர் வரையில் பாதிக்கப்பட்டதாக புகார்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வேலூர் சைபர் கிரைம் பிரிவில் வேலூரைச் சேர்ந்த பெண் அளித்த புகாரில், ‘ஆன்லைன் வேைல உள்ளதாக வாட்ஸ் அப்பில் லிங்க அனுப்பியுள்ளார். அந்த லிங்கில் உள் நுழைந்தபோது, ரூ.13ஆயிரம் வரை வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அதேபோல் பள்ளிகொண்டாவைச் சேர்ந்த வாலிபர் அளித்த புகாரில், ‘பேஸ்புக் கணக்கினை ஹேக் செய்து, நண்பரின் புகைப்படத்தை மார்பிங் செய்து அனுப்பி அவசர தேவை உள்ளதாக கூறி ரூ.1 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக, தெரிவித்துள்ளார். காட்பாடி காங்கேயநல்லூரைச் சேர்ந்த பெண் அளித்த புகாரில், ‘யுடியூப் வீடியோ பார்த்தால், பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, ரூ.15,000 வரை மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரஜினி கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் புகார்கள் அதிகளவில் வருகிறது. இதில் இளம் வயதினர், பெண்கள் தான் அதிகளவில் ஆன்லைனில் பணத்தை இழக்கின்றனர். செல்போனில் தேவையில்லாத பைல்களை தொட வேண்டாம். இதில் குறிப்பாக தற்போது ஏபிகே என்று வரும் பைல்களை திறக்காதீர்கள். அதில் தான் மோசடிகள் அதிகளவில் நடக்கிறது. தற்போது அரசு திட்டங்களில் எந்த பணிகள் நடக்கிறதோ அதனை வைத்து மோசடிகள் நடக்கிறது. எஸ்ஐஆர் பணிகள், ஆதார் பதிவு, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றின் பணிக்கான தகவல்களை போல் லிங்க் அனுப்பி மோசடி செய்கின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்றார்.
தனி கட்டிடத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம்;
வேலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் பிரிவு தனி போலீஸ் நிலையமாக (தனி கட்டிடத்திற்கு) மாற்ற அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்ைககள் இருக்கும். வேலூர் எஸ்பி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள காவலர் பணியிடை பயிற்சி பள்ளி வேலூர் கோட்டைக்கு மாற்றப்பட்டதால், அங்கும் மாற்றபடலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

