Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வடமாநில வாக்காளர்களால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும்: வள்ளிமலையில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

பொன்னை, ஆக.3: வடமாநில வாக்காளர்களால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் என வள்ளிமலையில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் இத்திட்ட துவக்க விழா காட்பாடி அடுத்த வள்ளிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து காட்பாடி பிரம்மபுரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை பார்வையிட்ட அவர், பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள். வேலை தேடி இங்கு வந்துள்ள பீகார் மாநிலத்தவர்களை இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்னை. காரணம், பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள். அதுபோல் இங்கு செய்ய முடியாது. லட்சக்கணக்கில் வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது, வருங்காலத்தில் தமிழக அரசியலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

பீகார் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுகளை செய்ய துவங்கியுள்ளது பாஜ. அதை ஜாக்கிரதையாக எதிர்த்தாக வேண்டும். எங்களுக்கு அந்த ஆபத்து என்றால், நாங்கள் அதை எதிர்க்க சீறும் சிங்கமாக மாறுவோம். உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் பெயர் தொடர்பாக, அதிமுகவின் வழக்கில், நீதிமன்றம் சொல்வதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஒரு மாநிலத்தில் சிறப்பாக செயல்படும் ஒரு திட்டத்தை, பிற மாநிலங்கள் விரும்பும். அதுேபால்தான் மம்தா, மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம். ஆணவக்கொலை கண்டிக்கத்தக்கது. அதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. இதற்கு தனிச்சட்டம் இயற்றுவது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் அமலு விஜயன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணைமேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.