பள்ளிகொண்டா, ஆக.3: ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.50 லட்சம் பணத்தை இழந்த குடியாத்தம் தனியார் பைனான்ஸ் கம்பெனி மானேஜர் பள்ளிகொண்டா அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சங்கர்(36). தனியார் பைனான்ஸ் கம்பெனியில் மானேஜராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பிரியங்கா(31) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், சங்கர் ஆன்லைன் டிரேடிங்கில் சுமார் ரூ.50 லட்சம் வரை பணம் செலுத்திய நிலையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வேலூரில் உள்ள பெட் ஷாப்புக்கு மருந்து வாங்கி வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு காரில் சென்றுள்ளார். மதியம் 1 மணியளவில் மனைவி பிரியங்காவுக்கு போன் செய்த சங்கர் தான் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துவிட்டதாக கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனையடுத்து செய்வதறியாமல் திகைத்த பிரியங்கா உறவினர்களுடன் கணவரை தேடியுள்ளார். போன் நம்பர் வைத்து டிராக் செய்து பார்த்ததில் பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு கிங்கினியம்மன் கோயில் தேசிய நெடுஞ்சாலை அருகே காரில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் சங்கர் இருந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரியங்கா இதுகுறித்து நேற்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பரிந்துரை செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் டிரேடிங் ஆப்பில் ரூ.50 லட்சம் நஷ்டம் ஆனதால் தனியார் பைனான்ஸ் கம்பெனி மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.