ஆம்பூர், டிச.1: ஆம்பூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் மின்னூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் சங்கர் மகன் சஞ்சய்(20), முருகன் மகன் பரத்(18), மின்னூர் இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்த பெயிண்டர் வேலை செய்பவர் ராமசந்திரன் மகன் குணால்(20). நண்பர்களான இவர்கள் மூவரும் நேற்றுமுன்தினம் பைக்கில் மின்னூரில் இருந்து புறப்பட்டனர்.
செங்கிலிகுப்பம் மின்னூர் டான்சி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த கார், இவர்களது பைக் மீது மோதியது. இதில் சஞ்சய், குணால் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியாயினர். படுகாயமடைந்த பரத்தை ஆம்பூர் தாலுகா போலீசார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

