Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி விழா துவங்கியது:  நாளை கருட சேவை உற்சவம்  26ம் தேதி தேரோட்டம்

காஞ்சிபுரம், மே 21: காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 22ம் தேதி கருட சேவை உற்சவமும், 26ம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளன. காஞ்சிபுரத்தில் மிகப் பழமையான வரலாற்று சிறப்புமிக்க  வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகாசி மாத பிரமோற்சவ விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடைபெற்றன.

கருடாழ்வார் ஓவியம் பொறித்த கொடியானது, கோயில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கொடியேற்றத்தின்போது உற்சவர் தேவி-பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள், வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்தில், வைர-வைடூரிய ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகே தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, மேளதாளங்கள் மற்றும் வாணவேடிக்கைகள் முழங்கின. பின்னர், கொடியேற்றம் முடிந்ததும் பெருமாள், தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

விழாவையொட்டி, நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் தேவி-பூதேவி சமேதராக பெருமாள் பல்வேறு உற்சவங்களில் அலங்கரிக்கப்பட்டு ராஜவீதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலிப்பார். அந்த வகையில், நேற்று மாலை சிம்ம வாகனத்திலும், மறுநாள் அம்ச வாகனம், சூரிய பிரபை வாகனத்திலும் வரதராஜ பெருமாள் வீதியுலா நடைபெற்றது. இக்கோயிலில், நாளை உலகப் புகழ்பெற்ற கருடசேவை உற்சவம் நடைபெறும். அப்போது, பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தொடர்ந்து அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை, தங்க பல்லாக்கு, யாளி வாகனம், தங்க சப்பரம், யானை வாகனம் அலங்கரித்த வாகனங்களில் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும், வரும் 26ம்தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அதிகாலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து பெருமாள் அலங்கரிக்கப்பட்டு, தேரடியில் உள்ள தேருக்கு வந்து பெருமாள் அமர்ந்து, ராஜவீதிகள் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக பிரமாண்ட வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இத்தேரை முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். மறுநாள் தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனம், ஆள்மேல் பல்லாக்கு, தீர்த்தவாரி, புண்ணியகோடி விமானம், த்வாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம் உள்பட பல்வேறு கோலங்களில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், மணியக்காரர் கிருஷ்ணகுமார், பட்டாச்சாரியார்கள், விழா குழுவினர் மற்றும் காஞ்சிபுரம் பகுதி மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.