துவரங்குறிச்சி, செப்.27: துவரங்குறிச்சி அருகே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மணியங்குறிச்சி அருகே உள்ள மாலைக்காட்டுப்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் மின் கம்பம் ஒன்று முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் அனைத்தும் உதிர்ந்சு கொட்டி கம்பி மட்டுமே மின் கம்பிகளை தாங்கி நிற்கிறது.
மேலும் மின்சார கம்பிகள் வயல் பகுதியில் மிகவும் தாழ்வாகவும் சென்று கொண்டிருக்கிறது. விவசாய நிலத்தில் பொது மக்கள் வேலை செய்யும் போது சற்று அச்சத்துடனேயே பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர கதியில் உழவு பணியில் ஈடுபட்டுள்ள டிராக்டர்கள் எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசி பேராபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி, புதிய மின் கம்பம் நடவேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.