துறையூர், அக். 24: துறையூர் அருகே ஆலத்துடையான் பட்டி பெரிய ஏரி, சின்ன ஏரி முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து நிரம்பி வழிந்தது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்துடையான் பட்டியில் சின்ன ஏரி, பெரிய ஏரி உள்ளது. பெரிய ஏரியின் பரப்பளவு 218 ஏக்கர் கொண்டது. வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து கொல்லிமலை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆலத்துடையான் பட்டி பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. இந்த ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீரானது சின்ன ஏரிக்குச் சென்றடைந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்தின் காரணமாக சின்ன ஏரியும் நிரம்பி வழிகிறது. சின்ன ஏரி நிரம்பி வழிவதை தொடர்ந்து, அங்கிருந்து செல்லும் தண்ணீர் ரெட்டியாப்பட்டி ஏரிக்கு செல்கிறது.
இதனால் இப்பகுதியில் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் கால்நடை வைத்திருப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை ஆரம்பித்த உடனே ஆலத்துடையான் பட்டி பெரிய ஏரி, சின்ன ஏரி நிரம்பி வழிந்ததால் மீண்டும் பலமுறை நிரம்பி வழியும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

