திருச்சி, அக். 24: திருச்சி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அக்டோபர் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் மாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவ கல்லூரி முதல்வர் குமரவேல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாத உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பன்நோக்கு மருத்துவமனை வளாகம் அருகே துவங்கிய பேரணி, மருத்துவமனை முழுவதும் வலம் வந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். இந்த பேரணியில் ஏராளமான செவிலியர்கள், செவிலிய மாணவர்கள் உள்ளிட்ட மருத்துவ கல்வி பயிலும் பலர் கலந்துகொண்டனர்.

