திருவெறும்பூர், நவ. 21: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டம் 25வது நிதியாண்டில் கட்டப்பட்ட புதிய சத்துணவு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திறந்து வைத்தார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு தயாரிப்பதற்கு உரிய சமையல் கூடம் இல்லாமல் இருந்து வந்தது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி புதிதாக வைப்பறையுடன் கூடிய சமையல் கட்டிடம் கட்டப்பட்டது.
இதனை நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, திமுக மாநகர செயலாளர் மதிவாணன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர் தாஜூதீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


