சமயபுரம், செப்.18: முசிறி தண்டலைப்புதூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி நேற்று அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து வாத்தலை அருகேயுள்ள கிளியநல்லூர் கிராமம் அருகே வந்து பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தது. அப்போது, அதே வழி தடத்தில் நாமக்கலில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.
இதில் தனியார் பேருந்தில் வந்த ஓட்டுநர் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய இரண்டு பேருந்துகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.