திருச்சி, நவ.12: இந்திய தேர்தல் கமிஷனின் சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பை (SIR) கைவிடக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். திருச்சி எம்பி துரை வைகோ முன்னிலை வகித்தார். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு உணவுப்பொருள் பாதுகாப்பு கழக தலைவருமான சுரேஷ் ராஜன் பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
எம்எல்ஏக்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், சவுந்தரராஜன், அப்துல் சமது, தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர்கள் திருச்சி கலை, ரெக்ஸ், மமக மாவட்ட செயலாளர் பைஸ் அகமது மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர். திமுக மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன் நன்றி கூறினார்.
