துவரங்குறிச்சி, செப்.10: துவரங்குறிச்சி அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் இரண்டு பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (60). நேற்று மாலை பொன்னம்பட்டி அருகே உள்ள சடவேலாம்பட்டி சாலையில் அவர் வளர்த்து வரும் இரண்டு ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்துவந்த இரு மர்ம நபர்கள் இப்பகுதியில் சாமி பார்க்கும் இடம் உள்ளதா என்று மூதாட்டியிடம் கேட்டவாறு அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக மூதாட்டி துவரங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டிஎஸ்பி காவியா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.