தொட்டியம், அக்.8: கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியை வித்யாவுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நல் ஆசான் விருது வழங்கினார். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றிய 5 பேராசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு அரசின் சார்பில் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தொட்டியம் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பு துறையின் துறைத்தலைவி வித்யாவும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பேராசிரியை வித்யாவுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார்.
தொழில்நுட்ப கல்வி இயக்கக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். விருது பெற்ற பேராசிரியை வித்யாவுக்கு கொங்குநாடு கல்வி குழும தலைவர் பெரியசாமி, கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி அய்யாத்துரை மற்றும் சக பேராசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.