திருவெறும்பூர், ஆக. 8: திருச்சி அருகே கஞ்சா விற்ற பிரபல கஞ்சா வியாபாரியை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு திருச்சி அருகே உள்ள புங்கனூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கண்காணித்தனர்.
அப்போது உங்கனூர் உருண்டை மலை பின்புறம் பாறைக்குழி அருகே புங்கனூர் காந்திநகர் சேக் மைதீன் காலனியைச் சேர்ந்த செல்வம் மகன் மெய்யப்பன்(33) என்ற பிரபல கஞ்சா வியாபாரி கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அப்போது அவரை கையும் களவுமாக மதுவிலக்கு பிரிவு போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் கஞ்சா வியாபாரியிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதன் மதிப்பு ரூ.12 ஆயிரத்து 500 ஆகும். அதன் அடிப்படையில் மெய்யப்பன் மீது திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஏற்கனவே மெய்யப்பன் மீது பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.