துவரங்குறிச்சி, நவ. 7: வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்று அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த சொக்கநாதபட்டி, யாகபுரம் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமானது. வீட்டுக்குள் புகுந்து விடும் குரங்குகள் உணவு பொருட்களை தின்பதோடு, அதனை வீணடிப்பது, பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்துவது என குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் குரங்குகளை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் காரணமாக வனச்சரக அலுவலர் சரவணகுமார் மற்றும் வனவர் பெரியசாமி தலைமையில் வனப் பணியாளர்கள் கிராமப்புற பகுதிகளில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் 19 குரங்குகள் சிக்கியது. கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை பாதுகாப்பான முறையில் எடுத்து சென்று, அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் விடப்பட்டது.
