துவரங்குறிச்சி, நவ. 7: பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து துவரங்குறிச்சி வளநாடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வளநாடு காவல்துறை சார்பில் பெண்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
எஸ்பி செல்வ நாகரத்தினம் அறிவுறுத்தலின்படி வளநாடு காவல் துறை பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள \”காவல் உதவி\” செயலி குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலின சமத்துவம் குறித்தும் விளக்கி உரை நிகழ்த்தினார்.
ஏதேனும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் செயலியை பயன்படுத்துவது குறித்தும் மாணவிகளிடம் விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் வளநாடு காவல் நிலைய காவலர்கள் பாஸ்கர், லதா மற்றும் டயானா நான்சி ஆகியோர் மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். உடன் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
