திருச்சி, செப்.30: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; பாடத்திட்டம் அதிகரிப்பு, புதிய நடைமுறை காரணமாக போதுமான கால அவகாசமின்றி முதுகலை ஆசிரியர்கள் பிஜிடிஆர்பி (PGTRB) தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே தேர்வர்களின் நலன்கருதி போதுமான கால அவகாசம் வழங்கி தேர்வை நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனுவை கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அனுப்பியிருந்தோம்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியின்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தோம். அதில் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க கேட்டு கொண்டிருந்தோம். இதை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஒரு தேர்வர் தேர்வில் வெற்றி பெற முடியுமா என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். எனவே மன உளைச்சலில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தேர்வை ஒத்தி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement