மணப்பாறை, நவ. 28: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே சுற்றுலா சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சரத்பாபு(23). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் விராலிமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா ெசன்றார். இதற்காக நேற்று தனது நண்பரின் காரில் அனைவரும் விராலிமலையில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வையம்பட்டி அடுத்த கல்பட்டி அருகே சரத்பாபு, தனது நண்பர்களுடன் சென்ற கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் தறிகெட்டு ஓடிய கார், சென்டர் மீடியினில் மோதி கவிழ்ந்து விபத்தானது. இதில் காரில் பயணித்த சரத்பாபு மற்றும் அவரது நண்பர்கள் விஜித், இஸ்மாயில் ஆகிய மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காயமடைந்த 3 பேரும் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

