திருவெறும்பூர், நவ. 28: திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவலன் உதவி செயலியை குறித்த விழிப்புணர்வு துவாக்குடி போலீசார் சார்பில் ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பெண்கள் என பலருக்கு நாள்தோறும் தொந்தரவுகளும், பிரச்சனைகளும் ஏற்பட்டு கொண்டு வருகிறது. இதனிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
காவலன் செயலி குறித்து, திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. காவலன் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து அதை எப்படி பயன்படுத்துவது குறித்து மாணவிகளுக்கு சொல்லித்தரப்பட்டது. காவலன் செயலியை பயன்படுத்தி அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துவாக்குடி அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் 766 மாணவ, மாணவியர் மற்றும் 40க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது காவலன் உதவி செயலியை உபயோகித்து காட்டி, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசிய பெண் காவலருடன், மாணவிகளை உரையாடல் செய்ய வைத்து, அதனை அனைவருக்கும் பிஏ சிஸ்டம் மூலம் விளக்கி காட்டப்பட்டது. குறிப்பாக சென்னையில் இருந்து பெண் காவலர் பேசும் போது, 2 பேர் டிரிகர் செய்துள்ளனர். அங்கு ஏதேனும் பிரச்சனையா? முதலில் டிரிகர் செய்த பிரியதர்ஷினி என்பவர் 9 நம்பர்கள் தான் பதிவேற்றியுள்ளார். அவரை மீண்டும் புதுப்பிப்பு செய்ய ேவண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் அவருடைய பெற்றோருடன் தொடர்பு கொள்ள முயன்றார்.
பின்னர் 2வதாக டிரிகர் செய்த எண்ணுடன் பேசும் போது, மாணவி இருக்கும் இடத்தை சரியாக சொல்லி பிரியதர்ஷினிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டனர். இவை அனைத்தும் 65 வினாடிக்குள் நடந்தது. இதனை பிஏ சிஸ்டம் மூலம் கேட்ட 733 மாணவ மாணவியர் மற்றும் 40 ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த உணர்ச்சி பெருக்கில் ைகத்தட்டி காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் முடிவில், துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் பேசும் போது, காவலன் செயலி என்பது பெண்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எனவே அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மாணவ மாணவியருக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மாணவியர்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும் அநீதிகளை தடுக்க எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சோசியல் மீடியாவிற்கு மாணவிகள் என்றும் அடிமையாக கூடாது என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அகிலன் உள்ளிட்ட மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி அலுவலர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

