திருவெறும்பூர், அக்.25: திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதியில் இயந்திரத்தில் நடவு செய்த சுமார் 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் பாதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே விளக்கு கூத்தைப்பார், பத்தாளப்பேட்டை, நடராஜபுரம், அரசன்குடி, வேங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா ஒரு போக நெற்பயிர்களில் சுமார் 1000 ஏக்கர் சம்பா ஒரு போக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். நெற்பயிர்கள் இளம் பயிர்களாக இருப்பதால் ஒன்று இரண்டு நாட்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும் என்றும், அதற்கு மேல்தண்ணீர் வடியாமல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தால் அழுகும் சூழ்நிலை உருவாகும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மலை வெள்ள நீரில் மூழ்கியுள்ள சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
