திருச்சி, நவ.11:திருச்சியில் கொலை வழக்கு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை பிடிக்க முற்பட்ட போலீசாரை அரிவாளால் தாக்கியபோது இருவர் காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். திருச்சி பீமநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இக்கொலை சம்பந்தமாக இளமாறன், பிரபாகரன், நந்து மற்றும் கணேசன் ஆகியோரை பாலக்கரை போலீசார் பிடித்தனர்.
முக்கிய குற்றவாளியான லால்குடியை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ரங்கம் திருவானைக்காவல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் படி சதீஷை பிடிக்க ரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்து சதீஷ் போலீசாரை வெட்டி விட்டு தப்பிக்க முயன்றான். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சதீஷின் வலது முட்டியில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் போலீசார் காயம் அடைந்த சதீஷை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காயமடைந்த போலீஸ்காரர்கள் மாதவராஜ், மற்றும் சார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோரை சிகிச்சைக்காக ரங்கம் அரசு மருத்துவமையில் அனுமதித்தனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி திருச்சி ரங்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த ஜார்ஜ் வில்லியம்ஸ், மாதவராஜ் ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார்.
