வேலூர், ஜூலை 11:
வேலூரில் பயிற்சி முடித்த 2ம் நிலை பெண் காவலர்கள் 182 பேருக்கு போலீஸ் நிலையத்தில் 15 நாட்கள் பயிற்சி தொடங்கியது. வேலூர் கோட்டையில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் 182 2ம் நிலை பெண் போலீசாருக்கு 7 மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா கடந்த 8ம் தேதி நடந்தது. இதில் சிறப்பாக பயிற்சி முடித்த பெண் போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து பயிற்சி முடித்த 182 2ம் நிலை பெண் போலீசாரும் தற்போது போலீஸ் நிலையத்தில் தங்களது 15 நாள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒரு போலீஸ் நிலையத்திற்கு 15 பேர் என 182 பேரும் 15 நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். போலீஸ் நிலைய பணிகள் குறித்து அவர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. இதையடுத்து ஆயுதப்படையில் 15 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சி முடிந்ததும் போலீஸ் நிலையத்தில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.